பக்கங்கள்

Friday 3 September 2010

இலங்கைக்கு விசேட நிரந்தர பிரதிநிதி ஒருவரை இந்தியா நியமிக்கும் சாத்தியம்


இலங்கைக்கு விசேட நிரந்தர பிரதிநிதி ஒருவரை இந்திய அரசு நியமிப்பதற்கான சாத்தியம் காணப்படுகிறது. தமிழ் சமூகத்தின் தேவைகளைக் கவனிக்கவும் மீள்குடியேற்றத்தை மேற்பார்வை செய்யவும் விசேட தூதுவரை இந்தியா நியமிக்கும் சாத்தியம் காணப்படுகிறது.

முக்கியமாக அயல் நாடான இந்தியாவுடன் இராஜதந்திர ரீதியில் நிரந்தரமான நிலைப்பாட்டைப் பேணிக் கடைப்பிடிப்பதற்காக விசேட தூதுவர் ஒருவரை வைத்திருப்பது குறித்து இந்திய அரசு பரிசீலித்து வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளதாக ரைம்ஸ் ஒவ் இந்தியா நேற்று குறிப்பிட்டுள்ளது.



ஏற்கனவே இலங்கையின் வட மாகாணத்தின் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக விசேட பிரதிநிதி ஒருவர் நியமிக்கப்படவிருப்பதாக இந்திய அரசாங்கம் அறிவித்திருந்தது.

அவர் இந்திய வெளியுறவு அமைச்சின் பிரதிநிதி ஒருவராக இருப்பார் என முன்னதாக தெரிவிக்கப்பட்டது.



இந்த நிலையில் அவரை நிரந்தர இராஜதந்திர தூதுவராக நியமிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக, இந்திய அரசாங்க தகவல்களை மேற்கோள்காட்டி, த ரைம்ஸ் ஒப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.



இதேவேளை, இலங்கையின் நிலைவரத்தை நேரடியாக ஆராய்வதற்காக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா இந்த மாத இறுதியில் அல்லது அக்டோபர் மாத முற்பகுதியில் இலங்கைக்கு வருகை தரும் சாத்தியமிருப்பதாக இந்திய அரச அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



இலங்கையின் மீள்குடியேற்ற நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துவதற்கு இந்தியா முயற்சித்து வருகிறது. உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றத்தை பூர்த்தி செய்து அரசியல் தீர்வு காணும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமென கிருஷ்ணா இலங்கைத் தலைமைத்துவத்திற்கு வலியுறுத்தல் விடுப்பார் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.



கலந்துரையாடலை நடத்தி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் இதய சுத்தியுடனான தலைமைத்துவம் குறைவாக இருப்பதால் அரசியல் தீர்வுக்கான விடயங்கள் தாமதமாகி வருகின்றது என்ற கருத்தை கொழும்பிலுள்ள தலைமைத்துவம் தொடர்ந்தும் கொண்டுள்ளது.



விடுதலைப் புலிகளுடன் முன்னர் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்த தமிழ்த் தலைவர்களுடன் எந்தவொரு பேச்சுவார்த்தையையும் நடத்துவதற்கு விரும்பவில்லையென புதுடில்லிக்கு இலங்கை அரசு கூறியுள்ளது
 

விடுதலைப்புலிகளுக்கு எதிர்க்கட்சியினரே நிதி வழங்கினர்: ஜனாதிபதி



எதிர்க்கட்சியினரே தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு நிதி வழங்கியதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார்.
யுத்தத்தை முன்னெடுக்க பணம் இல்லை என கூறி எதிர்க்கட்சி 2002 ஆம் ஆண்டு போர் நிறுத்தத்தை மேற்கொண்டது. இதன் மூலம் நாட்டை காட்டிக்கொடுக்கும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
யுத்தத்த்தை முன்னெடுக்க முடியவில்லை எனக்கூறிய எதிர்க்கட்சியினர்,  தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு நிதிகளை வழங்கினர்.
இந்தநிலையில் தமது அரசாங்கம், நிதி பற்றாக்குறை இருந்த நிலையிலும் யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வந்து அபிவிருத்தியையும் முன்னெடுப்பதாக தெரிவித்துள்ளார்.
இதேவேளை யுத்தம் நிறைவடைந்து விட்ட போதும், அபிவிருத்தி பணிகள் நிறைவடையாது முழுமையான பயனை பெற முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்


மரண அறிவித்தல்கள்

  • அறிவித்தல் 4
  • அறிவித்தல் 3
  • அறிவித்தல் 2
  • அறிவித்தல் 1